எடை.

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் கூற வேண்டும்.

1049. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, மக்கள் ஒரு வருடம், இரண்டு ஆண்டுகளில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர், (குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெற்றுக் கொள்வதாக) பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் குறிப்பிட்ட எடைக்காகவும் குறிப்பிட்ட அளவுக்காகவும் கொடுக்கட்டும்!'' என்று கூறினார்கள்.
''ஒரு வருடம், இரண்டு ஆண்டுகளில்'' என்றோ, 'இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளில்'' என்றோ தனக்கு அறிவிக்கப்பட்டதாக அறிவிப்பாளர் இஸ்மாயீல் இப்னு உலய்யா(ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்.

ஸலமில் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் கூற வேண்டும்.

1050. இப்னு அபில் முஜாலித்(ரலி) அறிவித்தார். ''அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்களும் அபூ புர்தா(ரலி) அவர்களும் ஸலம் விஷயத்தில் கருத்து வேறுபட்டார்கள். அப்போது, என்னை இப்னு அபீ அஃவ்பா(ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். அவர்களிடம் சென்று நான் இது பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் கோதுமை வாற்கோதுமை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பேரீச்சை ஆகியவற்றிற்காக முன்பணம் கொடுத்து வந்தோம்!'' என்றார்கள். பிறகு இப்னு அப்ஸா(ரலி) அவர்களிடம் கேட்டேன்; அவர்களும் இவ்வாறே கூறினார்கள்!''

தோட்டம் துரவு மற்றும் விவசாய நிலம் இல்லாதவர்களிடம் விளைபொருட்களுக்காக முன்பணம் கொடுத்தல்.

1051. முஹம்மத் இப்னு அபில் முஜாலித்(ரலி) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் (ரலி) அவர்களும், அபூ புர்தா(ரலி) அவர்களும் என்னை அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் அனுப்பி, 'நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் கோதுமைக்காக முன்பணம் கொடுத்திருக்கிறார்களா?' என்று கேள்!'' என்றனர். (அவ்வாறே நான் கேட்டபோது) அப்துல்லாஹ் இப்னு அபீ அஃவ்பா(ரலி), 'கோதுமை, வாற்கோதுமை, ஸைத்தூன் (ஆலிவ்) எண்ணெய் ஆகியவற்றிற்காக அளவும் தவணையும் குறிப்பிட்டு, ஷாம் வாசிகளான 'நபீத்' எனும் குலத்தாரிடம் நாங்கள் முன்பணம் கொடுத்து வந்தோம்! என்றார். 'தோட்டம் துரவும் விவசாய நிலமும் யாரிடம் இருக்கிறதோ அவரிடமா?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'நாங்கள் அதுபற்றி விசாரிக்க மாட்டோம்!'' என்றார்கள். பிறகு, அவ்விருவரும் என்னை அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அவர்களிடம் அனுப்ப, அவர்களிடம் சென்று நான் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்கள் பொருட்களுக்கு முன்பணம் கொடுத்து வந்தனர்; (முன்பணம் பெறுபவர்களிடம்) 'அவர்களுக்குத் தோட்டம் துரவு அல்லது விவசாய நிலம் இருக்கிறதா' என்று நாங்கள் கேட்க மாட்டோம்!'' என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment