கூட்டுச் சேருதல்.

உணவிலும் பயணச் செலவிலும் பிற பண்டங்களிலும் கூட்டுச் சேருதல்.

1131. ஸலமா(ரலி) அறிவித்தார். (ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவு தீர்ந்து போய்ப் பஞ்சத்திற்குள்ளானார்கள். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, (புசிப்பதற்காகத்) தங்கள் ஒட்டகங்களை அறுக்க அனுமதி கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். (வழியில்) அவர்களை உமர்(ரலி) சந்திக்க, மக்கள் அவர்களுக்கு (நடந்த விஷயத்தை)த் தெரிவித்தார்கள். அதற்கு உமர்(ரலி), 'உங்கள் ஒட்டகங்களை அறுத்து (உண்டு)விட்ட பிறகு நீங்கள் எப்படி உயிர் வாழ்வீர்கள்?' என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் தங்களின் ஒட்டகத்தை அறுத்து (உண்டு)விட்ட பிறகு அவர்கள் எப்படி உயிர் வாழ்வார்கள்?' என்று கேட்டார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்கள் தங்கள் பயண உணவில் எஞ்சியதைக் கொண்டு வரும்படி அவர்களிடையே அறிவிப்புச் செய்யுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அறிவிப்புச் செய்யப்பட்டு, மக்கள் தங்கள் எஞ்சிய உணவைக் கொண்டு வந்து போடுவதற்காக ஒரு தோல் விரிப்பு விரித்து வைக்கப்பட்டது. மக்கள் அதில் தங்கள் எஞ்சிய உணவுகளை (குவியலாக) வைத்துவிட்டார்கள். இறைத் தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்து அதில் பரக்கத்தை அளிக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டினார்கள். பிறகு, தங்கள் பாத்திரங்களைக் கொண்டு வரும்படி மக்களை அழைத்தார்கள். மக்கள், தங்கள் இரண்டு கைகளையும் குவித்து (உணவில் தங்களின் பங்கைப்) பெற்றார்கள். அனைவரும் உணவைப் பெற்ற பிறகு நபி(ஸல்) அவர்கள், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை என்றும் நான் இறைத்தூதர் என்றும் சாட்சி கூறுகிறேன்'' என்றார்கள்.

1132. அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

ஆடுகளைப் பங்கிடுதல்.

1133. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் தங்கியிருந்தோம். மக்களுக்குப் பசி எடுத்தது. அவர்கள் போரில் கிடைத்த செல்வங்களிலிருந்து சில ஒட்டகங்களையும் ஆடுகளையும் பெற்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே) அறுத்துப், பாத்திரங்களை (அடுப்பில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டனர். நபி(ஸல்) அவர்கள் (இந்த விஷயம் தெரிய வந்தவுடன்) பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டு (அவற்றிலிருந்துஅவை வெளியே கொட்டப்பட்டு)விட்டன. பிறகு, அவற்றை அவர்கள் பங்கிட்டார்கள். பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக வைத்தார்கள். அப்போது ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்கள் அதைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களிடம் அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருந்தன. ஒருவர் (நபித் தோழர்) அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து ஓர் அம்பை எறிந்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பது போல் இந்தப் பிராணிகளிலும் கட்டுக் கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே செய்யுங்கள் (அம்பெறிந்து தடுத்து நிறுத்துங்கள்)'' என்று கூறினார்கள். நான், '(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் பகைவர்களை (சந்திக்க நேரிடுமோ என்று) நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (இந்த ஒட்டகத்தை) அறுக்கலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்), அவர்கள், 'இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டி ருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர, அதைப் பற்றி ('அது ஏன் கூடாது' என்று) நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் (எத்தியோப்பியர்களின்)கத்திகளாகும் என்று கூறினார்கள்.

கூட்டாளிகளிடையே பொருள்களுக்கு ஒத்த விலையை நிர்ணயித்தல்.

1134. தன் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவர் (வசதியுடையவராயின்) தன் செல்வத்தைக் கொண்டு அவ்வடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரின் மீது கடமையாகும். அவரிடம் செல்வம் இல்லையெனில் அந்த அடிமையின் விலை, (அவனை) ஒத்த (அடிமையின்) விலையைக் கொண்டு மதிப்பிடப்பட்டு அவன் உழைத்துச் சம்பாதிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும். அவன் மீது தாங்க முடியாத (உழைப்பைச் சுமத்திச்) சிரமத்தை ஏற்படுத்தக் கூடாது ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹூரைரா(ரலி)அறிவித்தார்.

ஒரு பொருளைப் பங்கிடுவதற்காக சீட்டுக் குலுக்கிப் போடலாமா?

1135. ' அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது. கீழ்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

(வியாபாரத்திற்காக வாங்கும்) உணவு முதலிய பொருள்களில் கூட்டு.

1136. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார். என் தாயார் ஸைனப் பின்த்து ஹுமைத்(ரலி) (நான் சிறுவனாயிருக்கும் போது) என்னை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இவனிடம் (இஸ்லாத்தின் படி நடப்பதற்கான) உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'சிறுவனாயிற்றே!'' என்று கூறிவிட்டு, என் தலையைத் தடவிக் கொடுத்து எனக்காக (அருள்வளம் வேண்டி) பிரார்த்தித்தார்கள்.

ஸுஹ்ரா இப்னு மஅபத்(ரஹ்) அறிவித்தார். என்னை என் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) கடைவீதிக்குக் கொண்டு சென்று உணவுப் பொருளை வாங்குவார்கள். (அப்போது அவர்களை இப்னு உமர்(ரலி) அவர்களும் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களும் சந்திப்பார்கள். அப்போது அவ்விருவரும், 'எங்களுடன் உணவு வியாபாரத்தில் கூட்டாளியாகி விடுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள் உங்களுக்காக அருள்வளம் வேண்டி பிரார்த்தித்துள்ளார்கள்'' என்று கூறுவார்கள். அவ்வாறே, என் பாட்டனாரும் அவர்களின் கூட்டாளியாகி விடுவார்கள். சில வேளைகளில், ஓர் ஒட்டகம் முழுக்க அப்படியே (லாபமாக) அவருக்குக் கிடைக்கும். அதை (தம்) வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

No comments:

Post a Comment