சினையூட்டுதல்.

  வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்.

நல்ல மனிதரைக் கூலிக்கு அமர்த்துதல்.

1054. அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி(ஸல்) அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி(ஸல) அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை! (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருக்கவே மாட்டேன்!)'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள் 'பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்!'' என்று பதிலளித்தார்கள்.

சில கீராத் கூலிக்காக ஆடு மேய்த்தல்.

1055. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ''அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்;. அப்போது நபித்தோழர்கள், 'நீங்களுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அஸரிலிருந்து இரவுவரை ஒருவரைக் கூலிக்கு அமர்த்துவது.

1056. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகியோரின் உவமை, குறிப்பிட்ட கூலிக்கு, ஒரு நாள் முழுக்க இரவுவரை, தனக்காக வேலை செய்யும்படி ஒரு மனிதரால் அமர்த்தப்பட்டவர்கள் ஆவர்! அவர் (முதலில்) ஒரு கூட்டத்தாரை கூலிக்கு அமர்த்தினார். அவர்கள் நடுப்பகல்வரை வேலை செய்துவிட்டு, 'நீர் எங்களுக்குத் தருவதாகக் கூறிய கூலி எங்களுக்குத் தேவையில்லை. எங்கள் வேலை வீணாகட்டும்!' எனக் கூறினார்கள். அப்போது கூலிக்கு அமர்த்தியவர் அவர்களிடம், 'இவ்வாறு செய்யாதீர்கள்! உங்கள் எஞ்சிய வேலைகளையும் பூர்த்தி செய்யுங்கள்! கூலியையும் முழுமையாகப் பெறுங்கள்!' எனக் கூறினார். அவர்கள் (ஏற்க) மறுத்து வேலையை விட்டுவிட்டனர். அவர்களுக்குப் பின், மற்றும் சில கூலியாட்களை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்களிடம் அவர், 'இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தியாக்குங்கள்! அவர்களுக்குத் தருவதாகக் கூறிய கூலியை உங்களுக்குத் தருகிறேன்!'' என்றார். அவர்கள் அஸர் தொழுகைவரை வேலை செய்துவிட்டு 'உமக்காக நாங்கள் வேலை செய்தது வீணாகட்டும்! எங்களுக்காக நீர் நிர்ணயித்த கூலியையும் நீரே வைத்துக் கொள்ளும்!'' என்றனர். அவர் 'உங்கள் எஞ்சிய வேலையைப் பூர்த்தி செய்யுங்கள்! பகலில் இன்னும் சிறிது நேரமே மிச்சமுள்ளது!'' என அவர்களிடம் கூறினார். அவர்கள் (வேலை செய்ய) மறுத்துவிட்டனர். பிறகு, அன்றைய பொழுதில் எஞ்சிய நேரத்தில் வேலை செய்வதற்காக மற்றொரு கூட்டத்தாரை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் சூரியன் மறையும்வரை உள்ள எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால், அவர்கள் முதலிரண்டு கூட்டத்தினரின் கூலியையும் சேர்த்து முழுமையாகப் பெற்றனர். இதுதான் (முஸ்லிம்களாகிய) இவர்களுக்கும் இவர்கள் ஏற்றுள்ள பிரகாசத்திற்கும் உரிய உவமையாகும்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

கூலிக்கு அமர்த்தப்பட்டவர் கூலியை வாங்காமல் சென்ற பிறகு, கூலிக்கு அமர்த்தியவர் அதைக் கொண்டு உழைத்து அதைப் பெருகச் செய்திருந்தால் அல்லது ஒருவர் பிறரின் செல்வத்தைக் கொண்டு உழைத்து அதில் லாபம் பெற்றிருந்தால்...

1057. உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர். இறுதியில் (மலையில் இருந்த) குகையொன்றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர். அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டு வந்து குகைவாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் தவிர நீங்கள் தப்ப முடியாது!'' என்று தமக்குள் கூறினர். அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்கு முன் என் குடும்பத்தினருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை! ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயும் தந்தையும் (முன்பே) உறங்கி விட்டிருக்க கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்கு முன், என் குடும்பத்தினருக்கோ என் அடிமைகளுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பாததால் அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்துத் தமக்குரிய பாலைக் குடித்தனர். எனவே இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். உடனே, அவர்கள் வெளியேற முடியாத அளவிற்குப் பாறை சற்று விலகியது!. மற்றொருவர், 'இறைவா! என் தந்தையின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைந்திட அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பேரில் நூற்றி இருபது தங்கக்காசுகளை அவளுக்குக் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, 'முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்!'' என்று அவள் கூறினாள். உடனே, அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளைவிட்டுத் திரும்பி விட்டேன். நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாணயத்தை அவளிடமே விட்டு விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை விலகியது. ஆயினும் அவர்களால் வெளியேற முடியவில்லை.

மூன்றாமவர், 'இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியை விட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்!'' என்று கூறினார். 'நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்!'' என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னை கேலி செய்யாதீர்!'' என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!'' என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்று விடாமல் ஓட்டிச் சென்றார். 'இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று!' எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்! 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அறிவித்தார்.

அல் ஃபாத்திஹா (அல்ஹம்து) ஸூராவால் ஓதிப்பார்ப்பதற்காக வழங்கப்படும் கூலி.

1058. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தினரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். அப்போது அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், 'இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!'' என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து 'கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?' என்று கேட்டனர். அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!'' என்றார். அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்..'' என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர், கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். 'இதைப் பங்கு வையுங்கள்!'' என்று ஒருவர் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக்கூடாது!'' என்று ஓதிப் பார்த்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது (அல்ஹம்து சூரா) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?' என்று கேட்டுவிட்டு, 'நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள். அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்து கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

ஆண் விலங்குகளைப் பெண் விலங்குகளுடன் இணையச் செய்வதற்கு கட்டணம் பெறுதல்.

1059. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஆண் விலங்குகளைப் பெண் விலங்குகளுடன் இணையச் செய்வதற்கு (பொலிப் பிராணியைக் கொண்டு பெண் விலங்குகளுக்கு சினையூட்டுவதற்கு) கட்டணம் பெறுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
 
 

No comments:

Post a Comment